பல்வேறு வகையான கொரோனா தொற்று குறித்து கண்காணிக்க வேண்டிய தேவை நமக்கு எழுந்திருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:
“கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாம் களத்தில் மிகவும் நுண்ணிய அளவில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. கொரோனா தொற்றின் பல்வேறு வகைகள் குறித்து வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவின் பல்வேறு வகைகள் குறித்து நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவையில் இருக்கின்றோம்.
கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்கு ஏற்ற போதுமான பழக்க வழக்கங்களை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கான தேவையும் எழுந்துள்ளது. மலை வாசஸ்தலங்களுக்கும், சந்தைகளுக்கும் செல்லும் பொதுமக்களில் பலர் முக க்கவசம் அணியாமல் செல்கின்றனர். இது மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது.
கொரோனா தொற்றுப் பரவல் மூன்றாவது அலைக்கு சாத்தியமுள்ள நிலையில் அதனை தடுக்க நவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணிகளை நாம் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.







