மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும் – அமைச்சர் ஆனந்த்!

மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக, திமுக, இடதுசாரிகள், அதிமுக மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அந்தந்த கட்சித் தலைவர்கள் மற்றும் நட்சத்திர போச்சாளர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிராசாரத்தில் பங்கேற்றிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மதுராந்தகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது அமைச்சர் ஆனந்த் பேசுகையில், “யார் என்ன பிரச்சினைகளை கூறினாலும் சிரித்த முகத்துடன் அதை மரகதம் குமரவேல் சரி செய்து தருவார். நான் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தொகுதிக்குள் செல்லும்போது ஒரு பெண், ‘1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது; 2026-ல் தான் தமிழகத்திற்கு சுதந்திரம் கிடைத்தது’ என்று கூறினார். அதற்கு காரணம் நம் தலைவர்.

வேட்பாளர் என்றால் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர் அல்ல. மக்கள் எப்போது அழைத்தாலும் அவர்களை சந்திக்க வருபவராக இருக்க வேண்டும். பதவி என்பது அதிகாரம் அல்ல, மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பாகும். மதுராந்தகத்திற்கு புதிய நம்பிக்கை தேவைப்படுகிறது. அந்த நம்பிக்கையின் பெயர் மரகதம் குமரவேல் ஆகும். மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.