மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் தந்த யோகாவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் மத்தாளம் பாறையில் ஷோகோ மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. கிராமப்புற மாணவ மாணவிகளின் மேம்பாட்டிற்காக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்றார். அவரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், மென்பொருள் நிறுவன நிர்வாகி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தை ஆளுநர் சுற்றிப் பார்த்தார். பின்னர் நடந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியா பாராம்பரியம் கொண்ட நாடு என்றும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் தந்த யோகாவை இன்று உலக நாடுகள் பின்பற்றி வருகிறது என்றும் நாம் அனைவரும் யோகாவை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி நிறுவனங்கள் செல்லும் நிலையில் நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி வந்துள்ள இந்த ஷோகோ நிறுவனம். கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, நல்ல ஊதியத்தையும் வழங்குவதால் அவர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
இந்த நிறுவனம் இன்னும் பல கிராமங்களின் மாணவ, மாணவிகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் வகையில் செயல்பட்டு நம் நாட்டை உலக நாடுகளுக்கு முன்னோடியாக உயர்த்த வேண்டும் என ஆர்.என்.ரவி கூறினார்.
– இரா.நம்பிராஜன்








