ஆளுநருக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சர்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை நீங்களே பார்க்கிறீர்கள். கடலூர் திமுக எம்.பி முந்திரி தோட்டத்தில் ஒருவர் மர்மமாக உயிரிழந்தார். திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சங்கர், மாநகராட்சி ஊழியரை தாக்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன், அரசு ஊழியரை ஜாதி பெயரை சொல்லி திட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்தில் ஏழைத் தாயிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நடந்து கொண்ட விதத்தையும் பார்க்க வேண்டும். இந்த செயலுக்காக அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், இல்லை என்றால் அவரின் வீடு முற்றுகையிடப்படும். முதலமைச்சர் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்கிறார். நாளைக்குள்ளாக அமைச்சர் தன் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரின் வீட்டை சுற்றி நாளை மாலை முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்று வரும் நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். அதே அமைச்சர், இந்தி படித்தால் பானிபூரி தான் விற்க வேண்டும் என ஆளுநர் முன்னிலையில் பேசியிருந்தார்.
ஆளுநர், தமிழக மண்ணின் சனாதனத்தை பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களா? ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை. ஆனால் ஆளுநரை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் டெல்லிக்கும் தொடர்புப் பாலமாக இருப்பவர் மத்திய அமைச்சர் எல்.முருகன். தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க அனைத்து உரிமையும் அமைச்சர் எல்.முருகனுக்கு உண்டு என்றார்.
மேலும், அதிமுக பொதுக்குழு முறைப்படி நடந்துள்ளது. அதனால் அந்த தலைவரோடு அந்த கட்சியோடு பாஜக கூட்டணியில் இருக்கும். எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. திரௌபதி முர்மு இன்றைய தேதி அடிப்படையில் 64% வாக்குகள் உறுதியாக உள்ளது. இ பி எஸ் – ஓ பி எஸ் ஆகிய இருவருமே முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.