இலவசங்கள் கூடாது என்னும் மத்திய மோடி அரசை வன்மையாக கண்டிப்பதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை மோடி அரசின் 8 ஆண்டு கால மோசமான நடவடிக்கைகளை விளக்கும் விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தின் மூலம் 50 லட்சம் இல்லங்களில் இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளோம் என கூறினார்.
அண்மையில் இலவசங்கள் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்தியா போன்ற நாடுகளில் இலவசங்கள் இல்லாமல் இருக்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை சுட்டிக்காட்டி பேசிய கே.பாலகிருஷ்ணன், இலவசங்கள் கூடாது என்னும் மோடி அரசை வன்மையாக கண்டிப்பதாக கூறினார். உலகத்திலேயே கார்பரேட்களுக்கு வரிகளை குறைத்து பாதுகாக்கும் அரசாக மோடி அரசு இருக்கிறது என குற்றம்சாட்டினார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் உயிரிழப்பு இல்லை. திட்டமிட்ட கொலைக்கே வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்த அவர், பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கும் பணிகளை மட்டுமே செய்துள்ளது. கள்ளக்குறிச்சி வன்முறை கண்டிக்கத்தக்கது தான், ஆனால் ஏன் நடைபெற்றது என ஆழ்ந்து கவனிக்க வேண்டி உள்ளது. தடையங்களை அழிக்க வன்முறைக்கு பின்னால் பள்ளி நிர்வாகமே இருக்கலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பால் புலன் விசாரணை ஒரு மாதம் முடங்கி போய் உள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
சில தேர்வுக்கு போன மாணவர்களை கூட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறிப்பாக பட்டியலின மாணவர்களை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பள்ளி நிர்வாகத்தின் பிள்ளைகளை இன்னும் எந்த விசாரணை அமைப்பும் விசாரிக்காதது சந்தேகம் அளிக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை முறையாக செயல்படவில்லை. ஆர்எஸ்எஸ் பாஜகவின் மேலிடம் அழுத்தத்தால் தான் காவல்துறை செயல் இழந்தது என விமர்சித்தார்.
பரந்தூரில் விமான நிலையம் உள்ளிட்ட எந்த வளர்ச்சி திட்டங்கள் வந்தாலும் பாதிப்பு இல்லாத வகையில் மக்களின் முழு ஒத்துழைப்பு பெற்று தான் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், திமுக – பாஜக தமிழ்நாட்டில் நெருங்கி வருகிறது என பாஜக தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி வருவதற்கு, முதலமைச்சர் தக்க பதிலை தெரிவித்துள்ளதாகவும் கே.பாலகிருஷ்ணன் கூறினார். இதன் மூலம் மக்களிடையே பாஜக எழுப்பி வரும் தேவையற்ற சந்தேகங்களை தவிடு பொடி ஆக்கி இருக்கிறார் முதலமைச்சர் என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








