மத்திய அரசு என்றுதான் தாங்கள் அழைப்போம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேச்சு என அனைத்திலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு வார்த்தையை பயன்படுத்த பாஜக சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.
இருப்பினும், ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவது சமூக குற்றம் அல்ல எனவும், அதனை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஒன்றிய அரசு தொடர்பாக அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, ஒன்றிய அரசு தொடர்பாக கருத்து தெரிவித்தார். எங்களை பொறுத்தவரை மத்திய அரசு என்று தான் அழைப்போம், பெயரை மாற்றுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை என்று அன்புமணி கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர் என்ற அவர், ஆனால் இப்போது கேட்டால் தேதி சொல்லவில்லை என கூறுகின்றனர் என்றும், அது ஆக்க பூர்வமான கருத்து இல்லை, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் குறைக்கலாம் எனவும் கோரிக்கையை முன்வைத்தார். தமிழக அரசு பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் அவர் கூறினார்.






