பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

தமிழகத்தில் வருகின்றன பருவமழையை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை…

தமிழகத்தில் வருகின்றன பருவமழையை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பருவமழையை எதிர்நோக்கி தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 16ம் தேதி அரசு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உததரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 35 முதல் 75 சதவீதம் வரை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்காக மத்திய மீட்பு படையினர் 2048 பேர் தயார் நிலையில் உள்ளனர். எல்லா வகையிலும் தயார் நிலையில் உள்ளோம். 121 பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், குறைந்தபட்ச மழையை விட அதிக மழை பெய்யும் என்று தான் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தமிழ்நாடு சார்பில் 1249 பேரும், மத்திய அரசு சார்பில் என 2048 பேரும் தயார் நிலையில் உள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள் தகவல் தெரிவிக்கும் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநில கட்டுப்பாட்டு மையம் 1070 எண் உள்ளது. அதே போல் மாவட்ட அளவில் 1077 எண் கொடுக்கப்பட்டுள்ளது. 131 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது.

இட பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் தேவைக்கேற்ப பாதுகாப்பான பகுதியில் உள்ள தனியார் கல்யாண மண்டபங்களை அந்தந்த பகுதி அரசு நிர்வாகத்தினர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், புயல் வந்தாலும் அதை எதிர்நோக்கி தான் எல்லாவற்றையும் செய்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பட்டு மையம் உள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர்கள் சொல்லும் தகவல்கள் கண்காணிக்கப்படும். யார் நல்லது சொன்னாலும் அதை கேட்பதில் தவறில்லை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.