இனி வரப்போகும் தேர்தலில் வெற்றி பெறப் போவது நாங்கள் தான் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிய வைத்து பின்பு பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் ஆட்சி மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதாகவும், இனி வரப்போகும் தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். மேலும், கோட்டையில் கொடியேற்ற இனி அதிமுகவினால் முடியாது என எம்.பி டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய அவர், விரைவில் கோட்டையிலும் கொடியேற்றுவோம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஊழல் செய்ததாகக் கூறும் டி.ஆர்.பாலு, இந்தியாவிலேயே ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது திமுக ஆட்சிதான் எனக் கூறினார். மேலும், எங்களைப் பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என இளைஞர்களின் வாழ்வு சீர்கெட்டுக் கிடைக்கிறது என்பது மு.க.ஸ்டாலின் அரசாங்கம் திறமையற்ற அரசாங்கம் என்பதனை காட்டுவதாக உள்ளது எனக்கூறினார்.
அண்மைச் செய்தி: ‘ராணிப்பேட்டையில் விசிக பிரமுகர் வெட்டிப் படுகொலை; விசாரணை தீவிரம்’
திமுக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகக் குற்றம்சாட்டிய அவர், இனி வரப்போகும் எந்த தேர்தல் இருந்தாலும் வெற்றி பெறப் போவது நாங்கள் தான் எனத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் திறமை இல்லாமல் இருப்பதால் தான் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பதாகவும், இன்று தமிழ்நாடு பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.








