“காணாமல் போனவர்களை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்” – அமைச்சர் ராஜ்மோகன்!

காணாமல் போனவர்களை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தமிழக அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழகத்தை சார்ந்த 319 பேர் நேபாளத்திற்கு பயணம் செய்துள்ளனர். இதில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர். பாதுகாப்பாக உள்ள அனைவரும் தமிழகம் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை வேளையில் 100 பேர் குறித்த தகவலை கண்டறிய முடியவில்லை.

ஆனால் இது போன்ற சம்பவங்களின் போது 20 நாட்கள் கழித்து கூட பலர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். எனவே ஒருவர் கூட பாதிப்படையாமல் அனைவரையும் மீட்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. முதலமைச்சர் விஜயும் அதையே வலியுறுத்தியுள்ளார். நேபாள அரசு தீவிரமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடப்பட்டு வருகிறார்கள். அங்கு இதுபோன்ற சம்பவங்கள் முன்பும் நடைபெற்றிருப்பதால் அவர்களுக்கு அந்த அனுபவம் இருக்கிறது. அந்த நாட்டின் உதவியுடன் தொடர்ச்சியாக மீட்பு பணியை நாங்களும் கவனித்து வருகிறோம்.

தமிழக துறை அமைச்சர் தென்னரசு மட்டும் டெல்லியில் தங்கி இருந்து இந்த மீட்பு பணிகளை கவனிப்பார். அடுத்த சில தினங்களில் வேறு சில அமைச்சர்களும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மூன்று தினங்களாக இந்திய அரசு, நேபாளம் அரசு, தமிழ்நாடு அரசு என அனைவரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளோம் இது தொடரும். ஒரு தமிழர் கூட விடுபட்டு விடக்கூடாது என்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சம்பவம் நடைபெற்ற பல கிமீ தொலைவில் அடையாளம் காணாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டெடுக்கப்படும் உடல்களையும் கூட தமிழகத்திலிருந்து அங்கு சென்றவர்களுடன் சென்று அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதலில் குறைந்த அளவில் சென்றனர் என்று எண்ணினோம், ஆனால் சிறு சிறு குழுக்காக பலர். சென்றுள்ளனர். பெங்களூர், மலேசியா போன்ற இடத்திலிருந்து தமிழகர்கள் சென்றுள்ளனர். தற்போது வரை காணாமல் போனவர்களை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.