வயநாடு நிலச்சரிவு – பலரின் உயிரை காப்பாற்றிய கிளி!

சூரல்மலையில் இளைஞர் வளர்த்து வந்த கிளியின் எச்சரிக்கையால் பல குடும்பங்கள் நிலச்சரிவில் இருந்து தப்பித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி…

சூரல்மலையில் இளைஞர் வளர்த்து வந்த கிளியின் எச்சரிக்கையால் பல குடும்பங்கள் நிலச்சரிவில் இருந்து தப்பித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு கடந்த 29ம் தேதி ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, இன்று 7வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுவாக பறவைகள் மற்றும் விலங்குகள் இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறன்கொண்டவை. அந்த வகையில், வயநாட்டைச் சேர்ந்த இளைஞர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான கிங்கினி என்ற கிளி எச்சரிக்கை செய்ததால் நிலச்சரிவில் இருந்து அவரது குடும்பம் மட்டுமல்லாமல், அவரது நண்பர் மற்றும் அண்டை வீட்டாரின் குடும்பமும் நிலச்சரிவில் இருந்து தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் கிங்கினி என்ற செல்லக் கிளியை வளர்த்து வருகிறார். நிலச்சரிவுக்கு முந்தைய தினம் காலனி சாலை என்ற பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது, தங்கள் செல்லப்பிராணி கிங்கினியையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். மறுநாள் அதிகாலை  கிங்கினி அதன் கூண்டுக்குள் திடீரென ஒருவிதமாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பயங்கர சப்தத்துடன் அலறத் துவங்கியதுடன், இரும்புக் கூண்டை பலமாகத் தாக்கியுள்ளது. இதில், அந்தக் கிளியின் இறகுகள் உதிரத் தொடங்கியுள்ளன.

இதையும் படியுங்கள் :பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் – வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் போராடி தோல்வி!

இதனை பார்த்த வினோத், ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொண்டார். சூரல்மலைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நான் எனது அண்டை வீட்டினருக்கும் தகவல் கொடுத்தேன். அனைவருமே உறக்கத்தில் இருந்தனர். ஆனால் எனது போனை எடுத்து பேசி வெளியே நடப்பதைப் பார்த்தனர். இதையடுத்து, உடனடியாக அனைவரும் தங்களது வீட்டில் இருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுள்ளனர்.

நிலச்சரிவில் வினோத் மற்றும் ஜிஜின் ஆகியோரின் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. பிரசாந்த் மற்றும் அஷ்கர் ஆகியோரின் வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன. வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர். செல்லக்கிளி எச்சரித்ததால் பலரும் உயிர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.