கச்சத்தீவை தாரை வார்க்கும்போது கருணாநிதி தூங்கிக்கொண்டிருந்தாரா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கச்சத்தீவை தாரை வார்த்த போது, அதனை மீட்க வாய்ப்பிருந்தும் எந்தவித நடவடிக்கையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

கச்சத்தீவை தாரை வார்த்த போது, அதனை மீட்க வாய்ப்பிருந்தும் எந்தவித நடவடிக்கையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:

1974-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிரதமர் இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. அன்றைக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அன்று இருந்த சூழலில் மீனவர்களுக்கு ஆதரவாக இருந்து கச்சத்தீவை கொடுக்கமுடியாது என கூறியிருக்க வேண்டும். இதனால் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதி சுருங்கிவிட்டது.

1000 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது கச்சத்தீவில் ஓய்வெடுத்து, உணவு உண்டு, கோயில் திருவிழா கொண்டாடி உரிமை கொண்டாடி வந்தனர். அந்த உரிமையை எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல், ஒப்பந்தம் போடும் அளவிற்கு சென்றுள்ளது. அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி உறங்கிக் கொண்டிருந்தாரா?

ஜூன் 28-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆகஸ்ட் 21-ம் தேதி சட்டமன்றத்தில் கண் துடைப்பிற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீனவர்கள் தான் அப்போது பெரிய அளவில் எதிர்ப்பை காட்டி வந்தனர். அதன்பிறகு, 2006, 2011 ம் ஆண்டுகள் பின்னர் 2021ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் வந்தது. ஆனால் இந்த ஆட்சிக் காலங்களில் கச்சத்தீவை மீட்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால் அதிமுக காலத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு சுதந்திர தினவிழா மேடையில் கச்சத்தீவை மீட்பதே எனது முதல் நோக்கம் என கூறினார். மேலும் அதிமுக சார்பில் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக தொடங்கிய வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ளது.

17 ஆண்டுகளாக கச்சத்தீவு பிரச்னை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் இனி நடவடிகை எடுக்கப்படும் என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியின் முழு காணொலியை காண…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.