போர் பதற்றம் : உயரதிகாரிகளின் விடுமுறை ரத்து – ஒடிசா அரசு அறிவிப்பு!

இந்திய – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதோடு எல்லை பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி, பொது நிர்வாகம், பொது குறை தீர்க்கும் துறை, வருவாய் கோட்ட ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட மேலாளர்கள், போன்றோருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,

“நாட்டின் மேற்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக முக்கிய பணிகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது விடுமுறையில் உள்ள அனைத்து வருவாய் கோட்ட ஆணையர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களும் தலைமையகத்திற்கு திரும்பி உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில், எந்த அதிகரிக்கும் விடுமுறை வழங்கப்படாது என்றும், நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.