சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதாகக் கூறப்படும் விவகாரத்தையடுத்து, அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வர கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக டெல்லி சட்டமன்றத்தில் வரும் திங்கட்கிழமை ஆம் ஆத்மி கட்சி மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தாலோ அல்லது ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தாலோ எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரிக்கையை விடுப்பார்கள். ஆனால், காட்சிகள் மாறி டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி தனக்குத்தானே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்கான நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு திங்கட்கிழமை நடைபெறும் என டெல்லி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி பாஜக வசம் சென்றதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் மக்கள் பலரும் தன்னிடம் தொடர்ச்சியாக இவ்விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்புவதாகவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு உள்ளது? என்பது தொடர்பாக நிரூபிக்கவும் டெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்பு கொண்டு வர விரும்புவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்ற கூட்டத்தின் ஒரு நாள் சிறப்பு கூட்டத் தொடரில் அறிவித்தார்.
இதனையடுத்து இன்று ஒரு நாள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டிருந்த டெல்லி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








