பாஜக – என்.ஆர். காங்கிரஸ் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், தற்போது மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை முதலமைச்சர் புறக்கணித்துள்ளது புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும்
புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை சார்பில்
கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு இயக்கம்
நடைபெற்றது. கடற்கரை சாலை தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சபாநாயகர் செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் பங்கேற்றனர். கடற்கரை தூய்மைப்படுத்துவதன் முக்கியதுவம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் மாணவர்களின் நடைப்பயண பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, புதுச்சேரி மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், துணைநிலை ஆளுநர்
தமிழிசை செளந்தரராஜன், சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை
சௌந்தரராஜன், தூய்மையான கடற்கரை, பாதுகாப்பான கடல் என்ற வகையில் நாடு முழுவதும் கடற்கரைகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது, அதில் புதுச்சேரி கடற்கரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பிளாஸ்டிக் நெகிழி கடலில் அதிகரித்து வருவதாகக் கூறிய தமிழிசை, வருங்காலங்களில்
கடலில் உள்ள மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் காணப்படும் என
ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதால் அனைவரும் விழிப்புணர்வோடு இருந்து இந்த பூமிப் பந்தை காப்பாற்ற வேண்டிய கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். தூய்மையான புதுவையை உருவாக்குவோம் என்றார்.
இதனிடையே மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த
நிகழ்ச்சியின் அழைப்பிதழில் முதல்வர் ரங்கசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர்
லட்சுமிநாராயணன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில் முதல்வர் உள்ளிட்ட என்.ஆர். காங்கிரஸ் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாஜக –
என்.ஆர். காங்கிரஸ் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில் தற்போது மத்திய
அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியையே முதலமைச்சர் உள்ளிட்ட என். ஆர் காங்கிரஸ்
அமைச்சர்கள் புறக்கணித்துள்ளது புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








