வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளதாக, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளது. அதை அறிவிக்கும் வகையிலும், புதிய திரைப்படங்களின் அறிவிப்பு குறித்தும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் நடிகர்கள் சரத்குமார், ஆரவ், ஜீவா, பிரசாந்த், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஆரி அர்ஜூனன், பா.விஜய், வருண், இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, ஆர். வி. உதயகுமார், சுந்தர்.சி , ஏ.எல் விஜய், பேரரசு , நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து வேல்ஸ் நிறுவனம் பங்கு சந்தையில் நுழைந்ததை மணி அடித்து
மகிழ்ச்சியாக வரவேற்றனர். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், முதலில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் வேல்ஸ் நிறுவனம் துவங்கிய போது முதல் தற்போது வரையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டவர், எனது தந்தை ஐசரி வேலன். எம்ஜிஆருடன் ரிக்ஷாகாரன் படத்தில் நடித்த போது என்னையும் அங்கு அழைத்து சென்றார். 40 முதல் 50 படங்கள் வரை தற்போது தயாரித்துள்ளேன்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக 3 வருடமாக காத்திருந்து தற்போது பங்கு சந்தையில் நுழைந்து உள்ளோம். எனக்கும் அதை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் சில நாட்களில் கற்றுக் கொண்டேன். 99 ரூபாயில் இருந்த பங்கு தற்போது 106 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனது பங்கு தாரர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிவிடன்ட் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பட தயாரிப்பு மட்டுமில்லாமல், பெங்களூருவில், 50 ஏக்கரில் ஜூன் 25 ஆம் தேதி ஜாலிவுட் என்ற புதிய தீம் பார்க்கை துவங்க உள்ளோம். வேல்ஸ் நிறுவனத்தில் ஜெயம் ரவி, ஜீவா , ஆர்.ஜே பாலாஜி உடன் படங்கள் எடுக்க உள்ளதாகவும், 5 படங்கள் ரிலீஸ்க்காக காத்திருப்பதாகவும் , மேலும் 5 படங்களுக்கு தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், மற்ற 5 படங்களின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறினார்.
மேலும் 2024 ல் மிகப்பெரிய ஹீரோக்களுடன் வேல்ஸ் இணைந்து படம் பண்ணுவோம் என்றும், இனிவரும் படங்கள் எல்லாம் பான் இந்தியா படமாக தான் வரும். ஜீவா, அர்ஜூன் நடிக்கும் படம் பான் இந்தியா படமாக இருக்கும். அதன் முதல் லுக்போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று கூறிய ஐசரி கணேஷ், மீண்டும் நடிக்க ஆசை தான். ஆனால் தொழிலில் மிகவும் பிஸியாக இருப்பதால் நேரமில்லை. ஆந்திராவில் ராமஜெயம் பிலிம் சிட்டி போன்று தமிழ்நாட்டிலும் பெரிய பிலிம் சிட்டி விரைவில் வரும். நடிகர் சங்க கட்டடத்துக்கு ஏற்கனவே 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளேன். என் தந்தை ஐசரி வேலன் பெயரில் ஒரு அரங்கம் அமைப்பதற்காக பணம் கொடுத்துள்ளேன் என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா