ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சோவியத் யூனியனில் திருட்டு மற்றும் மோசடி வழக்கில் 9 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவா் யெவ்கெனி பிரிகோஸ். இவர் சோவியத் யூனியன் சிதறிய பிறகு, ரஷ்யாவின் தனியார் துணை ராணுவப் படையான வாக்னர் குழுவின் தலைவரானார். ரஷ்ய அதிபர் புதினுடன் பிரிகோஸுனுக்கு நீண்டகாலமாக உறவு உள்ளது.
அண்மையில் உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து வாக்னர் குழு முக்கியப் பங்காற்றியது. ஆனால் இந்த போரில் ரஷ்ய பாதுகாப்புத் துறை சார்பில் வாக்னர் குழுவுக்கு போதிய வெடிபொருள்கள் வழங்கப்படாததை விமர்சித்த பிரிகோஷினுக்கும், புதின் அரசுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவை நோக்கி படையெடுத்த பிரிகோஸ், ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். இதற்கிடையே, புதினுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், ஆயுதக் கிளர்ச்சியை கைவிட்டு பெலாரஸில் பிரிகோஸின் அரசியல் தஞ்சமடைவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்ற தனியார் விமானம் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 10 பேரில் பிரிகோஸின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த விபத்தின்போது அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் பிரிகோஸின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், அந்த விமானத்தில் பிரிகோஸ் பயணித்ததை சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.







