வரலாற்றுச் சாதனை படைத்த சந்திரயான் 3 – வாழ்த்துகளை பொழிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!

முன்னாள் இந்திய வீரர்களான வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் முதல் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் வரை சந்திரயான் 3 வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளனர். நிலவின்…

முன்னாள் இந்திய வீரர்களான வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் முதல் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் வரை சந்திரயான் 3 வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளனர்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி நேற்று மாலை 5.44 மணி அளவில் சந்திரயான் 3-ன் கடைசி கட்ட பணிகள் தொடங்கியது. அப்போது நிலவிற்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள இடைவெளியை சிறிது சிறிதாக குறைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது.அதே நேரத்தில் விக்ரம் லேண்டரின் கால்கள் நிலவை நோக்கி சரியாக திருப்பப்பட்டது. இதனை அடுத்து நிலவை நோக்கி மெல்ல விக்ரம் லேண்டர் நெருங்கிய நிலையில், இறுதியாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்தது.  அப்போது “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்”  என்று சந்திரயான் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது.

இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சரித்திர சாதனை படைத்துள்ளது.விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பிறகு பக்கவாட்டில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது. நேற்று இரவு மேலும் சில புகைப்படங்களை விக்ரம் லேண்டர் அனுப்பியதாக இஸ்ரோ தெரிவித்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பிறகு அதில் பொறுத்தப்பட்டுள்ள Landing Imager camera புதிய படத்தை அனுப்பியது.

அந்த படத்தில் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய தளமும், லேண்டரில் உள்ள கால்களின் நிழற்படமும் இடம்பெற்றுள்ளன. சந்திரயான் 3 நிலவின் சம தளத்தில் நிலையான இடத்தை தேர்வு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனால், உற்சாகமடைந்த முன்னாள், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்னாள் இந்திய வீரர்களான வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் முதல் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் வரை இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளனர். அவர் தனது ட்விட்டரில், “ இந்தியாவின் சந்திரயான் – 3 நிலவில் தரையிறக்கம் செய்து வரலாறு படைத்தது. இந்த வரலாற்றுப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்ரோ மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்!” என குறிப்பிட்டார்.

கவுதம் கம்பீர், “அருமையான சாதனை இந்தியா!” எனவும், தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா. நம் அனைவருக்கும் பெருமையான தருணம் மற்றும் இஸ்ரோ அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.” என பதிவிட்டு இருந்தனர்.

சூர்யகுமார் யாதவ், “வரலாறு! சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கிய அனைத்து இந்திய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! நமது நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் வெற்றிக்காக மிகவும் பெருமைப்படுகிறோம்” என்றார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், “வரலாறு. இந்த அற்புதமான சாதனைக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், “வாழ்த்துக்கள் இஸ்ரோ. ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம். உங்கள் அர்ப்பணிப்புக்கும் உறுதிக்கும் வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.