இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு, ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் 46-ஆவது கூட்டத்தில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதை உறுதி செய்யவேண்டும் என்ற ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிக்க வேண்டும். மேலும், கோரிக்கைக்கு ஆதரவாக உறுப்பு நாடுகளைத் திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.







