தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குப் பின்னர் முதன்முறையாக இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மட்டும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளமாட்டார் என தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து தென் ஆப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோசாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோஹன்னஸ்பா்கில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் ரஷிய அதிபா் விளாடிமிர் புதின் கலந்துகொள்ள மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையே போர் தொடங்கியது முதல், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவை எதிர்த்து வருவதோடு, போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், உக்ரைனிலிருந்து சட்டவிரோதமாகக் குழந்தைகளை நாடு கடத்திய குற்றத்துக்காகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இதனால் புதின் இந்த மாநாட்டில் கலந்துகொண்டால், போர்க் குற்றங்களுக்காக தென் ஆப்பிரிக்காவில் வைத்து அவா் கைது செய்யபடவேண்டிய சூழ்நிலை வந்து விடும் என்பதாலேயே, அதை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா









