தமிழ்நாட்டிலும் களைகட்டியது விஷூ மலையாள புத்தாண்டு கொண்டாட்டம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மலையாள புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நாடு முழுவதும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று விஷூ மலையாளப் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாள புத்தாண்டை பொதுமக்கள்…

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மலையாள புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

நாடு முழுவதும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று விஷூ மலையாளப் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாள புத்தாண்டை பொதுமக்கள் சிறப்பாக வரவேற்றனர். களியக்காவிளை, மார்த்தாண்டம், குழித்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மலையாள மக்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் வீடுகளில் வழிபாடு நடத்தினர்.

கடவுளுக்கு படைக்கப்பட்ட பழங்கள், பணம், கொன்றை பூக்கள் உள்ளிட்டவற்றை காணும் கனி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, புத்தாடையும், காசும் வழங்கும் கை நீட்டம் நடைபெற்றது. மேலும், கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர்.

இதையும் படியுங்கள் : ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீச்சு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பிரதமர் கிஷிடா

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயிலில் விஷூ திருநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சகஸ்ர கலச பூஜை செய்யப்பட்டதை தொடர்ந்து, சகஸ்ர அபிஷேகம் நடைபெற்றது. இதில் மலையாள மொழி பேசும் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விஷூ மலையாளப் புத்தாண்டையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் கனி தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு காய்கறிகளும் கனிகளும் படைக்கப்பட்டன. தொடர்ந்து, கனி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்கினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அதேபோல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு கணபதி ஹோமம், மிருதியுஞ்ச ஹோமம், சுதர்சன ஹோமம், உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.