தோனிக்குப் பிறகு விராத் கோலிதான் சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர் கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததை அடுத்து, கேப்டன் பதவியில் இருந்து விராத் கோலியை நீக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், விராத் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ’எம்.எஸ்.தோனிக்குப் பிறகு விராத் கோலி சிறந்த கேப்டனாக இருக்கிறார். அவர் சர்வதேச அரங்கில் 70 சதங்களைப் பூர்த்தி செய்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்திய அணி சில போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அதில் அவர் தவறு என்ன இருக்கிறது?
ஐந்து வருடங்களாக, இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருக்கிறது. அவர் சாதனையை பாருங்கள். அவருடைய ஆட்டம், கேப்டன் பதவிகளில் அவர் செயல்பாடு போன்றவை மிரட்டலானது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அற்புதமான வீரர். அவர் தன்னை உருவாக்கிக் கொண்ட விதம் தனித்துவமானது’ என்று தெரிவித்துள்ளார்.







