பிரபல இந்தி நடிகர் திலீப் குமாரின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் ஆனால் இன்னும் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில்தான் இருக்கிறார் என்றும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இந்தி சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் திலீப் குமார். 1944 ஆம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் நடிகரான இவர், அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ள இவர், மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்ற நடிகர் இவர்தான். கடைசியாக 1998-ம் ஆண்டு வரை நடித்த அவர், உடல் நலம் காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து வந்தார். சுமார் 60 ஆண்டுகள் இவர் திரைத்துறையில் தொடர்ந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் உடல் நிலை குறித்து அவரது மனைவி சைரா பானு கூறுகையில் ‘ அவரின் உடல் நிலை சீராக உள்ளது. ஆனால் அவர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறார். கூடியவிரைவில் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல நாங்கள் விரும்புகிறோம். அவரது உடல் நிலை முழுமையாக குணமாக அவரது ரசிகர்களின் பிராத்தனைகள் தேவை. அவர் விரைவில் மீண்டு வருவார்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.







