‘அக்னிபாத்’ திட்டத்திற்கு பீகார் இளைஞர்கள் எதிர்ப்பு – கண்ணீர் புகை குண்டு வீச்சு

அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தை எதிர்த்து பிகார் மாநில இளைஞர்கள் 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்டகாரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் குறுகிய…

அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தை எதிர்த்து பிகார் மாநில இளைஞர்கள் 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்டகாரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் குறுகிய கால வேலைவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில் இத்திட்டத்திற்கு பிகார் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு மேலெழுந்துள்ளது. இளைஞர்கள் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் குறுகிய கால வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனும் அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.

இதன் மூலம் 17 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி 10 அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடு செய்து மொத்தமுள்ள இந்த வீரர்களில் 25 சதவிகித வீரர்கள் நிரந்தரமாக ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

https://twitter.com/ANI/status/1537291884145455105

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் வன்முறையை எட்டியுள்ளது. ஆரா ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை ஆக்கிரமித்திருந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

அதேபோல ஜெகனாபாத்தில் காவல்துறை வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலை நடத்தியுள்ளனர். நவாடா பகுதியில் டயர்களை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்புகளை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த சூழலில் போராட்டக்காரர்களை கலைப்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருவதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.