பாஜகவின் பேரணியில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பாஜக ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை கொல்கத்தா மற்றும் ஹெளராவுக்கு வரத் தொடங்கினர்.
தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் முன்னேற முயன்றபோது, போலீஸார் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் வன்முறையாக வெடித்தது.
ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசின் ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக பாஜக நடத்திய மாபெரும் பேரணியின் போது, மேற்கு வங்க சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் எம்பி லாக்கெட் சட்டர்ஜி ஆகியோரை கொல்கத்தா போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். போராட்டத்தின் போது மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தாரையும் போலீசார் கைது செய்தனர்.
தலைமைச் செயலகம் அருகே ஹூக்ளி பாலத்திற்கு முன் உள்ள காவலர்கள் பயிற்சி பள்ளியில் பேரணியாக வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போலீஸார் விரட்டி அடித்தனர்.
இந்த வன்முறை அந்தப் பகுதியில் சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.








