விக்ரம் 100வது நாள் வெற்றி விழா – தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு

கமல்ஹாசன் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியதை கொண்டாடும் வகையில் நவம்பர் 7-ஆம் தேதி வெற்றி விழா ஒன்றை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் ஏற்பாடு…

கமல்ஹாசன் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியதை கொண்டாடும் வகையில் நவம்பர் 7-ஆம் தேதி வெற்றி விழா ஒன்றை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜுன் மாதம் 3ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

தமிழ் திரையுலகிற்கு நடிகர் கமல்ஹாசன் இத்திரைப்படம் மூலம் அதிரடி கம் பேக் கொடுத்தார். விக்ரம் படத்தில் லோகேஷ், கைதி திரைப்படத்தின் கதையை இணைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி, பல அசத்தலான காட்சிகளை அமைத்துத் திரை அரங்குகளை அதிரச் செய்தார். மேலும், சூர்யாவின் கதாப்பாத்திரமான ’ரோலெக்ஸ்’, இன்றும் ரசிகர்களிடமிருந்து நீக்கமுடியாததாக உள்ளது.

100 நாட்களைக் கடந்து பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் ரூபாய் 430 கோடி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் வெகுவிமரிசையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. இவ்வெற்றி விழா நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களான கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன் ஒருங்கிணைந்து
நடத்தும் இந்த வெற்றி விழாவில், விக்ரம் படத்தில் பங்காற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட பலரும் கௌரவிக்கப்பட உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.