காமராஜர் பிறந்தாளில் “தளபதி விஜய் பயிலகம்” தொடங்கும் விஜய் மக்கள் இயக்கம்!

காமராஜரரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்” ஆரம்பிக்கப்பட உள்ளது என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும்,…

காமராஜரரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்” ஆரம்பிக்கப்பட உள்ளது என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

அண்மையில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை வரவழைத்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசினார்.

நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஜூலை 11 மற்றும் ஜூலை 12 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. பெரியார், காமராஜர், அண்ணாவை பற்றி பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் அந்த கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் காமராஜர் பிறந்தநாளான ஜுலை 15-ம் தேதி பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் தெரிவித்தது தற்போது உறுதியாகியுள்ளது. அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பாட்டுள்ளதாவது:

நடிகர் விஜயின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்” ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கண்தானம் செய்வதற்காக விழியகம், இரத்த தானம் செய்வதற்காக குருதியகம், பசி பட்டினியால் தவிப்போருக்காக விருந்தகத்தை விஜய் தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.