எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அதோடு, பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் புகார் வந்தால் அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது எனவும் வாதிடப்பட்டது.
இதற்கு எடப்பாடி பழனி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை. லஞ்ச ஒழிப்பு துறை அளிக்கும் அறிக்கைக்கு ஸ்டாம்ப் வைக்கும் வழக்கமான நடைமுறை மட்டுமே அவருக்கு உள்ளது என வாதிட்டார்.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்திய, புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு, அதை ஆராய தேவையில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.







