எங்கள் பக்கத்திலிருந்து வரும் செய்திகள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது – விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள், இரத்த தானம் செயலி, மற்றும் உறுப்பினர் சேர்க்கை செயலி தொடக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்கமாக…

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள், இரத்த தானம் செயலி, மற்றும் உறுப்பினர் சேர்க்கை செயலி தொடக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் பனையூரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குருதியகம் இரத்த தானம் செயலி, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை செயலி ஆகியவை விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில்

தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, மக்கள் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் சக்தியை, மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிநடத்தும் விதமாக மற்றும் ஒரு முயற்சியாக இரத்ததானம் செய்ய தளபதி விஜய் குருதியகம் என்ற செயலியை (Mobile Application) உருவாக்கி இருக்கின்றோம். இதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னார்வலர்களாக இணைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் இரத்ததான சேவையை மக்களுக்காக வழங்க உள்ளோம். மேலும் இந்த செயலி, இரத்ததானம் கொடுக்க முன்வருபவர்கள் (Volunteers) இணைந்து கொள்ளவும், இரத்தம் தேவைப்படும் பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக செயல்படும்.

தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் விலைமதிப்பற்ற பல உயிர்களை காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வழங்கி வழிநடத்த இந்த செயலி துணைநிற்கும் என்பதையும், தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். இத்தோடு இதே நன்னாளில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூட்யூப், இணையதள பக்கங்களையும் திறந்துள்ளோம். தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். எங்கள் பக்கத்தில் இருந்து வரும் செய்திகளே அதிகாரப்பூர்வமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் வாரிசு படத்தின் படபிடிப்பு பணிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

– தினேஷ் உதய்  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.