இன்று முதல் தவெக கொடியினை தங்களது இல்லத்தில் பறக்க விட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் நடிகர் விஜய் நேற்று (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்து வைத்தார்.
இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் தவெக கொடியினை தங்களது இல்லத்தில் பறக்க விட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொது இடங்களில் உரிய அனுமதி பெற்று ஏற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமாண்ட மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டின் போது தனது கட்சியின் கொள்கை கோட்பாடுகளை அறிவிக்க இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே கட்சி மாநாடு நடத்துவதற்கான இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்து வருவதாக தவெக நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். முதலில் நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சி மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டதாகவும், தொடர்ந்து எல்லோரும் வந்து செல்ல வசதியாகவும் திருச்சியை தேர்வு செய்து அங்கு மாநாட்டை நடத்த திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இதில், திருச்சியில் பல்வேறு இடங்களை தேர்ந்தெடுத்தாலும் கடைசி நேரத்தில் மைதானம் கிடைக்காமல் போனதாக கூறப்பட்டது. இதன்பின்னர் தான் திருச்சி பொன்மலை கார்னரில் உள்ள ரயில்வே மைதானத்தை தேர்வு செய்ததாகவும், ஆனால் அங்கும் கடைசி நேரத்தில் மைதானம் கிடைக்காமல் போனதாக தவெக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து தான் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த திட்டமிட்டு, இதற்கான மைதானத்திற்கும் அனுமதி பெறப்பட்டதாக தகவல் வெளியாகியது.







