தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு எப்போது? – விஜய் முக்கிய அறிவிப்பு!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு, ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார். 

தமிழ் நாட்டில் சட்டமன்றத்  தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது.  இதனால் திமுக , அதிமுக   நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்

”என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்.வெற்றி நிச்சயம்.நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

இம்மாநாட்டை முன்னிட்டு, இன்று காலை 5 மணிக்கு மதுரையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட  ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளை  விஜய்  அறிவிக்க வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.