இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது பேட்டி ஒன்றில் பேசிய விக்னேஷ் சிவன், காத்துவாக்குல ரெண்டு காதல் படம் திரைக்கு வந்த பின் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நயன்தாரா கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ம் தேதி நடைபெற இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருப்பதாகவும், இதற்காக திருமண மண்டபத்தை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று முன்பதிவு செய்துள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement: