சென்னையில் சந்தேக வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் சென்று வீட்டுக்கு வந்த இளைஞர் சிறிது நேரத்திலேயே நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). பி கேட்டகிரி ரவுடியான இவர் மீது ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மஞ்சு என்ற பெண்ணுடன் இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது. மனைவி மற்றும் குழந்தையுடன் மனைவியின் உறவினர்கள் வசிக்கும் எம்ஜிஆர் நகர், பம்மல் நல்லதம்பி தெருவில் ஸ்ரீதர் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் விஜயலட்சுமி என்பவரின் வீட்டில் ஒரு சவரன் நகை மற்றும் ஐந்தாயிரம் பணம் காணாமல் போனதாக கடந்த 9-ம் தேதி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த வீட்டின் மேல் தளத்தில் இருந்த ஸ்ரீதரை சந்தேகத்தின் பேரில் 12 ஆம் தேதி மாலை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து அன்று இரவு ஸ்ரீதரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஸ்ரீதரை காவல் நிலையம் அழைத்து சென்று மீண்டும் விசாரணையில் ஈடுபட்டனர். பின் மதியம் இரண்டு மணி அளவில் விசாரணை முடிந்து ஸ்ரீதரை வீட்டுக்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது.
வீட்டுக்கு வந்த சில நிமிடங்களிலேயே ஸ்ரீதர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி அழுதுள்ளார். பதறிப்போன அவரது மனைவி மஞ்சு மற்றும் உறவினர்கள் உடனடியாக உப்பு கரைசல் நீரை ஸ்ரீதருக்கு கொடுத்துள்ளனர். ஸ்ரீதர் மயக்கமடைந்த நிலையில் கேகே நகரில் உள்ள ESI மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.ஆனால், வரும் வழியிலேயே ஸ்ரீதர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தி.நகர் காவல் துணை ஆணையர் அருண் கபிலன் எம்ஜிஆர் நகர் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






