வேலூர் | மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!

வேலூரில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி அருகே லட்சுமியம்மாள்புரம்
பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 17). இவர் தனியார்
பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் அவரின் பெற்றோர் இது குறித்து மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, மாயமான சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அந்த வகையில், விஷ்ணு பயன்படுத்திய செல்போன் எண் சிக்னலை வைத்து  போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அழிஞ்சிகுப்பம் அருகே கடைசியாக சிக்னல் பதிவான நிலையில் அந்த பகுதியில் போலீசார் தேடினர். இந்த சூழலில், விவசாய கிணற்றில் விஷ்ணு சடலமாக கிடப்பது தெரியவந்தது.

உடனடியாக தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விஷ்ணு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி விஷ்ணுவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் மேல்பட்டி காவல் நிலையம் அருகே பேரணாம்பட்டு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் மேல்பட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.