திரைப்பாடல்களில் சில வரிகள் திடீரென மாற்றப்படும்… வெகுவாக கவர சில பாடல்களின் வரிகள் சூழ்நிலைக்கேற்றபடி அமைக்கப்படும்… வேறு படத்திற்கு எழுதப்பட்ட பாடல், பிற படங்களில் இடம்பெற்றவை உள்ளிட்டவை குறித்த ஒரு தொகுப்பு இது…. வாருங்கள் பார்க்கலாம்…
குமுதம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் இன்றளவும் கல்லூரிகளிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தவறாமல் இடம் பெறுகிறது… பாடலை எழுதிய கவிஞர் மருதகாசி, சிட்டுப்போல பெண்ணிருந்தா என பல்லவியை தொடங்கி இருக்கிறார். தொடக்கத்திலேயே இப்படி இருந்தா எப்படி எனக் கேட்க, அப்போது மாமா என அன்புடன் அழைக்கப்பட்ட இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை நினைவில் கொண்டு சேர்க்கப்பட்டதுதான் மாமா… மாமா என்ற வரிகள்…
திருமண பந்தத்தை எளிதாக எடுத்துரைக்கும் வாராயோ தோழி வாராயோ பாடல் மணப்பந்தல் என்ற திரைப்படத்திற்காக எழுதப்பட்டது. ஆனால், அந்த திரைப்படத்தில் இடம்பெறாமல் சிவாஜி நடித்த வெற்றிப் படமான பாசமலரில் இடம்பெற்றது. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடல் பாடி வந்த எல்.ஆர். ஈஸ்வரியை வாராயோ தோழி பாடல் தோரணம் கட்டி வரவேற்றது.
அன்பே வா திரைப்படத்தில் புதிய வானம் பாடலில் இடம்பெற்ற உதயசூரியனின் பார்வையிலே என்ற வார்த்தை பின்னர் புதிய சூரியனாக உருமாறியது… பாடலில் அப்படி வந்தாலும், வரி உச்சரிப்பு உதயசூரியனாகத்தான் இருந்தது.
இதேபோல், நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய கண்ணை நம்பாதே என்ற பாடல்… அதில் பொன்பொருளை கண்டவுடன் வந்த வழிமறந்துவிட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே என்ற வரியில் கண்மூடி போகிறவர் போகட்டுமே என திருத்தினார் எம்ஜிஆர்.
யார் எழுதி யார் திருத்தினாலும் ஆரோக்கியமான சூழலால், என்றும் ஆராதிக்கப்பட்டு வரும் பாடல்கள் இன்றும் நம்மை பேச வைக்கின்றன…
- ஜே.முஹமது அலி.







