பத்திரப் பதிவு துறையில் உள்ள சர்வர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: பத்திரப் பதிவுத் துறை என்பது மிக முக்கியமான துறையாகும். வீட்டு மனை, நிலம் போன்ற சொத்துகளின் விற்பனைப் பதிவு மட்டுமல்லாது, திருமணப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பம் என்று மக்களுக்கு அவசியமான பல்வேறு பணிகளை இணையதளம் வாயிலாக பத்திரப் பதிவு துறை மேற்கொண்டு வருகிறது. தேவைக்கேற்ப பத்திரப் பதிவு அலுவலகங்கள் இல்லை. ஆனாலும், இணையதளம் வாயிலாக பத்திரப் பதிவு நடைபெறுவதால், சுலபமாகவும், விரைவாகவும், பத்திரப் பதிவுகளை மேற்கொண்டு பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.
ஆனால், பத்திரப் பதிவுத் துறையின் இணையதள சர்வரின் வேகம் கடந்த ஒரு வாரமாக குறைந்துள்ளது. பத்திரப் பதிவுத் துறையின் இணையதளத்துக்குச் சென்றால் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதனால், விண்ணப்பங்களை சரிபார்த்தல், ஆவணங்களை பதிவேற்றுதல், பதிவிறக்கம் செய்தல் போன்ற பணிகளைச் செய்ய முடியவில்லை. இதனால் 5 நிமிடத்தில் முடிய வேண்டிய பத்திரப் பதிவுக்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களும், ஆவண எழுத்தர்களும், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய, பதிவுத் துறை இணையதளத்தில் வசதி உள்ளது. அதில் முன்கூட்டியே ஆவணங்களை பதிவேற்றம் செய்து விடுவார்கள். இதனால், பத்திரப்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்து விடும். இந்த பப்ளிக் போர்ட்டலின் வேகமும் சில நாட்களாக குறைந்துள்ளது. இதனால், வீட்டுமனை, நிலங்களை பதிவு செய்யும் பொதுமக்களும், திருமணங்களை பதிவு செய்பவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வர் பிரச்சினையால், பத்திரப் பதிவுக்கான கட்டணத்தை முன்கூட்டியே இணையவழியில் முறையில் கட்டியவர்களால், அதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இதனால், பத்திரப்பதிவை தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுமனை, நிலங்கள், திருமண பதிவு என்பது மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம். நல்ல நேரம் பார்த்து பத்திரப் பதிவுக்காக வந்தவர்கள், அதனை தாங்கள் திட்டமிட்ட நேரத்தில் செய்ய முடியாதபோது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, பத்திரப் பதிவுத் துறையின் சர்வர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு, எளிதாகவும் விரைவாகவும் பத்திரப் பதிவு நடைபெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியம் கண்டனத்துக்குரியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








