அனைவரையும் வீட்டில் தேசியக்கொடி ஏற்றச் சொல்லுங்கள் தேசப்பற்றில் அரசியல் வேண்டாம் என திருமாவளவனை சந்தித்த வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
75வது சுதந்திர தினத்தையொட்டி வீடுதோறும் மூவர்ணக் கொடி திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மூவர்ணக் கொடியுடன் குடிமக்களின் உறவு ஆழமடையும் என்றும், இது குடிமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சுமார் 20 கோடி வீடுகளில் கொடி ஏற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ப்ரொபைல் பிக்சராக தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, பிரபலங்கள் பலரும் தங்களுடைய ப்ரொபைல் பிக்சராக தேசிய கொடியை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரொபைல் பிக்சராக தேசியக் கொடியை வைத்துள்ளார்.
ராமச்சந்திரா ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆயிரம் விளக்கு
பகுதியில் இருக்கும் மாலை முரசு அலுவலகத்தில் வைத்திருக்கும் ராமச்சந்திர
ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு திருமாவளவன் மலர் தூவி மரியாதை
செலுத்தினார். பின்னர், பாஜக சார்பில் வானதி சீனிவாசன் மரியாதை செய்தார்.
அப்போது, திருமாவளவனிடம் பேசிய வானதி சீனிவாசன், 75வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி அனைவரையும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றச் சொல்லுங்கள். அரசியல் வேறு, தேசப்பற்று வேறு என்று வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார்.
-ம.பவித்ரா








