பாஜக முக்கிய குழுவில் வானதி சீனிவாசனுக்கு இடம்

11 பேர் கொண்ட புதிய நாடாளுமன்ற குழுவையும், 15 பேர் கொண்ட மத்திய தேர்தல் பணிக்குழுவையும் பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் பணிக்குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த வானதி சீனிவாசன் இடம்பிடித்துள்ளார். பாஜகவின்…

11 பேர் கொண்ட புதிய நாடாளுமன்ற குழுவையும், 15 பேர் கொண்ட மத்திய தேர்தல் பணிக்குழுவையும் பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் பணிக்குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த வானதி சீனிவாசன் இடம்பிடித்துள்ளார்.

பாஜகவின் நாடாளுமன்ற குழு மாற்றியமைக்கப்பட்டு, 11 பேர் கொண்ட புதிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், புதிதாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கே. லக்ஷ்மண் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.இக்குழுவின் தலைவராக ஜெ.பி நட்டா உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் இக்குழுவில் உள்ளனர்.

இதேப்போல் 15 பேர் கொண்ட மத்திய தேர்தல் பணிக்குழுவையும் அக்கட்சி அறிவித்துள்ளது. இதில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இக்குழுவில் உறுப்பினராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜூவல் ஓரம், ஷானாவாஸ் ஹூசைன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில பாஜக துணைத் தலைவராக இருந்த வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசனை தோற்கடித்தார். அவருக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பாஜக குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இந்த நிலையில் கட்சி அதிகாரம் கொண்ட குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.