சீன உளவுக் கப்பல்; மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து உள்ளது என்றும், அதனை இலங்கைக்குள் நுழைய விடாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதிமுக எம்பி வைகோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால…

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து உள்ளது என்றும், அதனை இலங்கைக்குள் நுழைய விடாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதிமுக எம்பி வைகோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் எம்பி வைகோ சீனஉளவு கப்பல் குறித்து பேசினார். அப்போது, சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற உளவுக்கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சீன உளவுக்கப்பல், அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் கொண்டது என்றும், இந்த கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது எனவும் கூறினார்.

சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் எனக்கூறிய அவர், சீன கப்பலின் நடவடிக்கைகளை கண்காணிக்க கடற்படையினர், கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், சீன உளவு கப்பல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், சீனக் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சீன தனது உளவு கப்பலான யுவான் வாங்-5 கப்பலை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்டமிட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.