சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் – வைகோ கோரிக்கை

மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து சென்னை விமான நிலைய பெயர் பலகை குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கோரிக்கை வைத்தார். மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர்…

மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து சென்னை விமான நிலைய பெயர் பலகை குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கோரிக்கை வைத்தார்.

மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர், தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள். இவ்விரு தலைவர்களும், உலகத் தமிழர்களின் போற்றுதலுக்கு உரியவர்கள். சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்றும், உள்நாட்டுப் போக்குவரத்து முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இரு தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு இருந்த பெயர்ப்பலகைகளை, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, திடீரென நீக்கிவிட்டார்கள். அதனால், உலகம் முழுமையும் தமிழர்கள் கொந்தளித்தனர். எங்கள் இயக்கத்தின் சார்பில், வான் ஊர்தி நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினோம். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பலத்த கண்டனம் தெரிவித்தன.

சென்னை விமான நிலையம்

விமான நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, அந்தப் பணி நிறைவு பெற்றதும், இரண்டு தலைவர்களின் பெயர்ப்பலகைகள் மீண்டும் பொருத்தப்படும் என, ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்தது. ஆனால், அடுத்த சில மாதங்களில், இணையதளங்களில் இருந்தும், இரு தலைவர்களின் பெயர்களையும் ஓசை இன்றி நீக்கிவிட்டனர். நீக்க வேண்டும் என, யாரும் கோரிக்கை வைக்கவில்லை. தமிழக அரசிடம் கலந்து பேசவும் இல்லை. இது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்ற செயல், பெரும் வேதனை அளிக்கின்றது.

எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி, அண்ணா, காமராஜர் பெயர்களை மீண்டும் சென்னை விமான நிலைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களுக்கு சூட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இது குறித்து ஆய்வு செய்வதாக, அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்ததாகவும் வைகோ தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.