வைகைப் புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகியுள்ள ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், காமெடி என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில், வடிவேலுடன் இணைந்து நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றிருந்தது.
தலைசிறந்த நகைச்சுவை நடிகரான வடிவேலு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சிறிய பிரச்னை காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அவர் நடிக்காத போதிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும், மீம்கள் மூலமாக ரசிகர்கள் அவரை தொடர்ந்து ரசித்து வந்தனர்.
இந்நிலையில் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, அவர் நடித்துள்ள ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும், நீண்ட காத்திருப்புக்கு மத்தியிலும் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், நிச்சயமாக இத்திரைப்படம் பெரிய வெற்றியை அடையும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.








