உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க ‘எலி வளை’ முறையில் தீவிர முயற்சி!

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க  17-வது நாளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட…

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க  17-வது நாளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்தது.  இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து 60 மீட்டர் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன.  குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன.  துளையிடும் 25 டன் எடைக் கொண்ட ஆகர் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால்,  மீட்புப் பணிகள் தொடர்வதில் சிக்கல் நிலவியது.

பின்னர் விரிசல் சீர் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன.  தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதுமாக முடங்கியது.

மீதமுள்ள 10-12 மீட்டர் தொலைவுக்கு பணியாளர்களே நேரடியாக குழாயைச் செலுத்துவதற்கு இயந்திரத்தின் பிளேடை அகற்றுவது அவசியமாகிறது.  இந்தப் பணியை மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் கட்டுமானப் படைப்பிரிவைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு சென்றடைந்தனர்.

இதையும் படியுங்கள்: தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் : அரையிறுதியில் தமிழ்நாடு அணி தோல்வி!

ராணுவ வீரர்களால் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  ஆகர் இயந்திரம் பிளாஸ்மா கட்டர் மூலம் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது.  ஆகர் இயந்திரத்தின் முன் பகுதி பைப்லைனில் சிக்கியுள்ளதால் இயந்திரத்தின் முன்பகுதி மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருவதாகவும்,  குழாயின் கடைசிப் பகுதியின் 2 மீட்டர் பகுதியும் (அதாவது 48 முதல் 50 மீட்டர் வரை) முறுக்கப்பட்டுள்ளதாகவும்,  குழாயின் 2 மீட்டர் பகுதியை வெட்டி அகற்றுவதும் பெரும் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மெலிந்த தேகம்,  உயரம் குறைவான இவர்கள் சமதளம்,  மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறியஅளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன்காரணமாக ‘எலி வளை’ தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த குழுவைச் சேர்ந்த முன்னா கூறியதாவது:

ராக்வெல் என்ற நிறுவனத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஏற்கெனவே இயந்திரம் மூலம் பொருத்தப்பட்ட 47 மீட்டர் இரும்பு குழாயில் ஒரே நேரத்தில் 2 பேர் நுழைந்து சிறிய ரக இயந்திரங்களால் சுரங்கத்தை தொடர்ந்து தோண்டுவோம். இதன்படி 24 மணி நேரமும் சுரங்கத்தை தோண்ட முடிவு செய்துள்ளோம்.

திங்கள்கிழமை இரவு பணியைத் தொடங்கி உள்ளோம். எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை என்றால் அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் மீதமுள்ள 13 மீட்டர் தொலைவையும் தோண்டி குழாய்களை பொருத்திவிடுவோம். இதன்பிறகு இரும்பு குழாய் பாதை வழியாக 41 தொழிலாளர்களையும் எளிதாக மீட்க முடியும். இவ்வாறு முன்னா தெரிவித்தார்.

இதற்கிடையில் சுரங்கப் பாதையின் மேல் பகுதியில் இருந்து 86 மீட்டருக்கு செங்குத்தாக துளையிடும் பணியில் 36 மீட்டர் ஆழத்துக்கு இதுவரை துளையிடப்பட்டு உள்ளது. சுரங்கத்தின் அடிப்பாகம் வரை துளையிட்டு தொழிலாளர்களை நெருங்க வரும் 30-ம் தேதி வரை ஆகும் என்று மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.