உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது பதவியை உறுதி செய்துள்ளார்.
70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. ஆளும் கட்சியாக இருந்த பாஜகவும், காங்கிரசுக்கும் இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் கடந்த மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இதில் 48 தொகுதிகளில் பாஜகவும், 18 இடங்களில் காங்கிரசும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மை தொகுதிகளை பாஜக கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இந்த தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான புஷ்கர்சிங் தாமி காதிமா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். இதில் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரிடம் புஷ்கர்சிங் தாமி தோல்வியடைந்தார். எனினும் கட்சி அவரை முதல்வராக நியமித்தது. இதனால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் சாம்பவாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் கைலாஷ் கெடோரி தனது பதவியை ராஜினாமா செய்தார். காலியான அந்த தொகுதிக்கு கடந்த 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா கத்தோரியை எதிர்த்து போட்டியிட்ட முதல்வர் புஷ்கர்சிங் தாமி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் புஷ்கர் சிங் தாமி தனது முதல்வர் பதவியை தக்க வைத்துள்ளார்.
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியின் வெற்றிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உத்தரகாண்டின் சம்பவாத் தொகுதியில் வராறுமிக்க வெற்றி பெற்ற ஆற்றல்மிக்க முதல்வருக்கு வாழ்த்துகள்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு அவர் இன்னும் கடினமாக உழைப்பார் என்று நான் நம்புகிறேன். பாஜக மீது நம்பிக்கை வைத்ததற்காக சம்பவாத் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, பாஜக தொண்டர்களின் கடின உழைப்பையும் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.








