வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். குறிப்பாக டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்ற பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. அடுத்தடுத்து பேருந்துகள் மோதியதால் வாகனங்கள் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் 4 உயிரிழந்த நிலையில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து மதுரா காவல்துறையினர் கூறுகையில், 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அனைத்து வாகனங்களும் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.







