அமெரிக்காவில் இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசிய மற்றும் தாக்கிய பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பெண்கள் ஹோட்டலில் இரவு சாப்பிட்டுவிட்டு அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் தங்களுடைய காரை எடுக்க வந்துள்ளனர். அப்போது, வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்மெரல்டா என்கிற பெண் ஒருவர் அமெரிக்கா வாழ் இந்திய பெண்களிடம் மிகக் கடுமையாக நடந்துள்ளார். மேலும், அவர்களைத் தாக்க முயற்சித்ததோடு, இனவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
இந்தியாவில் வாழ்க்கை சரியில்லாததால் தானே நீங்கள் எல்லோரும் அமெரிக்காவிற்கு வருகிறீர்கள். இங்கு வந்து எல்லாவற்றையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளத் துடிக்கிறீர்கள். இந்தியாவில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்தால் நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள். இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள். சுத்தமாக நான் இந்தியவர்களை வெறுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், அவரிடம் துப்பாக்கி இருந்ததை கவனித்த மற்ற சில பெண்கள் இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர். உடனடியாக விரைந்து வந்த காவலர்கள் தீவிரவாத அச்சுறுத்தல் பெயரில் அமெரிக்கப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்திய பெண்களை அமெரிக்க பெண்மணி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








