காங்கிரஸ் தலைவர் பதவி: ராகுல் மறுத்துவிட்டால் அடுத்தது யாருக்கு வாய்ப்பு?

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் பதவியேற்பதற்கு அக்கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் அமரும்…

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் பதவியேற்பதற்கு அக்கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் அமரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி தனது முடிவை மாற்றிக்கொள்ளாத நிலையில், 137 ஆண்டுகள் பாரம்பரியமிக்க,  நாட்டின் மிகப்பழமையான கட்சியான காங்கிரசின் தலைவராகும் வாய்ப்பு யாருக்கு என்கிற கேள்வி தேசிய அரசியலில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக வாய்ப்பு உள்ளவர்களாக கருதப்படும் மூத்த தலைவர்களின் பட்டியலை பார்ப்போம். 

அசோக் கெலாட்  

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி ஏற்க அதிக வாய்ப்புள்ளவராக கருதப்படுபவர் அசோக் கெலாட். 71 வயதான அசோக் கெலாட்  ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுக் செயலாளர்களில் ஒருவரான அசோக் கெலாட் தற்போது மாநில அரசியலில் தீவிரம்காட்டி வந்தாலும் ஏற்கனவே தேசிய அரசியலில் முக்கிய நபராக அறியப்பட்டவர். 5 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் கெலாட் 3 முறை மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் பிரதமர் பதவி வகித்தபோது அவர்களது அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ளார். சுமார் அரை நூற்றாண்டுகள் காங்கிரசில் இருக்கும் அசோக் கெலாட், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின்போது காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டக்களங்களிலும் முன்னணி தளகர்த்தர்களில் ஒருவராக வலம் வந்துள்ளார். சமீபத்தில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை சுமார் 50 மணி நேரம் விசாரணை நடத்தியபோது அதனை கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் அசோக் கெலாட் கலந்துகொண்டார். தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பதையும் பொருட்படுத்தாமல் டெல்லி வீதிகளில் இறங்கி போராடி மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டார். இதற்காக அவர் போலீசாரால் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டார். கட்சிக்காக அசோக் கெலாட் மேற்கொண்ட இந்த அர்ப்பணிப்பு அக்கட்சி தலைமையையும், தொண்டர்களையும் வெகுவாக கவர்ந்ததாக கூறப்பட்டது. மேலும் அசோக் கெலாட்டை தலைவர் பதவியில் அமர்த்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஜி23 தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள், அவர்களிடையே அசோக் கெலாட்டிற்கு செல்வாக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கும் சச்சின் பைலட்டிற்கும் இடையே முதலமைச்சர் பதவி தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு முதலே மனக் கசப்பு இருந்து வருகிறது. அசோக் கெலாட்டை மீண்டும் தேசிய அரசியலுக்கு கொண்டு வருவதன் மூலம் 2023ல் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் சச்சின் பைலட்டை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து அம்மாநில காங்கிரசில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வரலாம் என்கிற கணக்கும் இதற்கு பின்னால் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் அசோக் கெலாட்டை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க,  தற்போது இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்துவதுபோல் கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லியில் சோனியாகாந்தியை  அசோக் கெலாட் சந்தித்துப்பேசினார். எனினும் தாம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுதாக வெளியான தகவலை ஊடகங்கள் மூலம்தான் தெரிந்துகொண்டதாக பிடிகொடுக்காமல் பேசுகிறார் அசோக் கெலாட்.

அம்பிகாசோனி

காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உறுப்பினராக உள்ள அம்பிகா சோனி, பஞ்சாப் மாநிலத்திலிருந்து வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். தற்போது 79 வயதான அம்பிகாசோனி, இளைஞர் காங்கிரஸ் தலைவர், மகளிர் காங்கிரஸ் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் என காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்தவர். நேரு காலத்திலிருந்தே அவரது குடும்பத்திற்கும் அம்பிகா சோனி குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு.  75வது சுதந்திர தினத்தின்போது  உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சோனியா காந்தியால் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வர முடியவில்லை. அப்போது அவருக்கு பதில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தவர் அம்பிகா சோனிதான். அடுத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனிதான் என்பதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக பரபரப்பாக பேசப்பட்டது.

மல்லிகார்ஜூன கார்கே

80 வயதான மல்லிகார்ஜூன கார்கே கர்நாடக மாநிலத்தில் காங்கிரசின் முகமாக அறியப்படுபவர். அம்மாநில சட்டப்பேரவைக்கு தொடர்ச்சியாக 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்கிற சாதனையை படைத்துள்ள மல்லிகார்ஜூன கார்கே தேசிய அரசியலிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே ரயில்வே, தொழிலாளர் நலம் உள்ளிட்ட முக்கிய இலாகாக்களுக்கு பொறுப்பு வகித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜகவின் முதல் ஆட்சிகாலத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவராக சிறப்பாக பணியாற்றி சோனியாகாந்தி, ராகுல்காந்தியின் கவனத்தை ஈர்த்த மல்லிகார்ஜூன கார்கே தற்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

சுஷில்குமார் ஷிண்டே

மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரான சுசில்குமார் ஷிண்டே, 80 வயதிலும் கட்சிப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருபவர். 1971ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுசில்குமார் ஷிண்டே கடந்த 50 ஆண்டுகளில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். மன்மோகன் சிங் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராகவும் சுஷில்குமார் ஷிண்டே  அங்கம் வகித்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசத்தின் ஆளுநராகவும் சுஷில்குமார் ஷிண்டே பதவி வகித்துள்ளார்.  திக்விஜய் சிங்

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான திக் விஜய் சிங்கின் அதிரடி கருத்துக்களும், நடவடிக்கைகளும் தேசிய அரசியலில் மிகவும் பிரபலம். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திக்விஜய் சிங், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிவிடுவார். சமீபத்தில்கூட மத்திய பிரதேச தலைநகர் போபாலில் போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, திக்விஜய் சிங் போலீசார் ஒருவரின் சட்டை காலரை பிடித்து இழுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும் திக்விஜய் சிங்கின் துணிச்சலான கருத்துக்களும், போராட்டக்களங்களில் அவர் முன்னின்று வழிநடத்துவதும் காங்கிரஸ் தலைமையையும், தொண்டர்களையும் மிகவும் கவர்ந்தவை எனக் கூறப்படுவதுண்டு. 75 வயதான திக்விஜய் சிங் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி  வகித்துள்ளார். அடுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

ப.சிதம்பரம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் தமது பொருளாதார அறிவாலும், அரசியல் வியூகங்களாலும் சோனியா காந்தி குடும்பத்தை மிகவும் கவர்ந்தவர். சோனியா காந்தி ஆலோசனை கேட்கும் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக கருதப்படும் ப.சிதம்பரம், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடங்கி பல்வேறு முக்கியப் பொறுப்புக்களை காங்கிரஸ் கட்சியில் வகித்துள்ளார். ராஜிவ்காந்தி, நரசிம்மராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன்சிங் என 5 பிரதமர்களின் அமைச்சரவையில் இடம் பெற்றவர் ப.சிதம்பரம். மத்திய நிதியமைச்சராக மட்டுமே 4 முறை பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவில் அறியப்பட்ட மூத்த தலைவர்களில் ஒருவராக ப.சிதம்பரம் விளங்குகிறார். 76 வயதான ப.சிதம்பரம் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

 

முகுல்வாஸ்னிக்

முன்னாள் மத்திய அமைச்சரான முகுல்வாஸ்னிக் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 62 வயதான அவர், தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக உள்ளார். இளம் வயதிலேயே காங்கிரசில் இணைந்த முகுல்வாஸ்னிக்,  தமது 25வயதிலேயே மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அகில இந்திய அளவில் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தலைமைப் பொறுப்பை வகித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளராகவும் பதவி  வகித்து திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தவர் முகுல் வாஸ்னிக். ராகுல்காந்திக்கு நெருக்கமானவர்களில் முகுல்வாஸ்னிக்கும் ஒருவராக கருதப்படுவதால் அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  பவன்குமார் பன்சால்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால பொருளாளராக தற்போது பதவி வகித்து வரும் பவன்குமார் பன்சால், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். தற்போது 74 வயது ஆகியுள்ள பவன்குமார் பன்சால், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை, ரயில்வேத்துறை உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களுக்கு பொறுப்பு வகித்துள்ளார். கட்சியின் இடைக்கால பொருளாளராக உள்ள பவன்குமார் பன்சால் அடுத்தக்கட்டமாக தலைவராக பதவி உயர்வு பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

கே.சி.வேணுகோபால்

கேரள காங்கிரஸ் கட்சியின் முகமாக அறியப்பட்டவர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால், தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பதவி வகித்து வருகிறார். 59 வயதான கே.சி.வேணு கோபால் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கருத்துக்களைக் கொடுப்பவர் என கட்சி வட்டாரத்தில் பாராட்டப்படுபவர். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடைபெற்றபோது விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது மாநிலங்களவையில் காங்கிரசின் குரலை வலுவாக எதிரொலித்து வருகிறார் கே.சி.வேணு கோபால்.

மீராகுமார்

பீகாரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான மீராக்குமார் நாடாளுமன்ற மக்களவைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 77வயதான அவர் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சராகவும் பின்னர் சமூகநீதி மற்று அதிகாரமளித்தல்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் 15வது மக்களவையின் சபாநாயகராக அவையை திறம்பட வழிநடத்தி சோனியா காந்தி குடும்பத்தினரின் பாராட்டுதலை பெற்றவர். இதனால் 2017ம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அவரை களம் இறக்கியது. இந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார். சுதந்திர போராட்டங்களில் முக்கிய பங்குவகித்தவரும் முன்னாள் துணை பிரதமருமான பாபு ஜெகன் ஜீவன் ராமின் மகள் மீரா குமார். காங்கிரஸ் கட்சியோடு இவரது குடும்பத்திற்கு நீண்ட நெடிய தொடர்பு உள்ளது.

ஷெல்ஜா குமாரி

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பெண் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஷெல்ஜா குமாரி, ஹரியானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்துள்ளார். மகளிர் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்துள்ள ஷெல்ஜா குமாரி பெண்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்பியுள்ளார். 59 வயதான ஷெல்ஜா குமாரி, நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் கல்வித்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். மன்மேகான் சிங் பிரதமராக இருந்தபோது, சமூகநீதித்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட இலாகாக்களின் அமைச்சராக இருந்துள்ளார். பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும் ஷெல்ஜா குமாரி அங்கம் வகித்துள்ளார்.

நேரு குடும்பத்தை சாராத ஒருவராக கடைசியாக காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்ந்திருந்தவர் சீதாராம் கேசரி. அவருக்கு பிறகு கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் சோனியாகாந்தி. அதிலிருந்து சுமார் கால் நூற்றாண்டுகளாக நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் தலைவர் பதவி நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த குடும்பத்தைச் சேராதவர்களிடையே மாறிமாறி இருந்து வந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக சுமார் 25 ஆண்டுகள் நேரு குடும்பத்தின் வசம் காங்கிரஸ் தலைவர் பதவி இருப்பது இதுவே முதல் முறை. அதனைத் தொடர காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விரும்பவில்லை என்று கூறப்படும் நிலையில் காலத்தின் கட்டாயமாக தற்போது நேரு குடும்பத்தை சாராதவரிடம் காங்கிரஸ் தலைவர் பதவி செல்லும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரசின் புதிய தலைவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது பலர் வேட்பு மனுதாக்கல் செய்வார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. வரும் 28ந்தேதி மதியம் கூடும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இதற்கான விடை கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.