காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியை அமெரிக்க ராணுவம் குண்டு வீசி கொன்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், தலிபான் கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானியர்களும் தலிபானின் அடக்குமுறைகளுக்குப் பயந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர்.
இதனால் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில், விமான நிலையத்தை குறிவைத்து இரண்டு உயிரிழப்பு தாக்குதல்கள் நேற்றுமுன் நடத்தப்பட்டன. இதில் அமெரிக்க படையினரைச் சேர்ந்த 13 பேர் உட்பட 175 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோரசான் பிரிவு (ISIS-Khorasan (ISIS-K))நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாக்குதல் நடத்தியவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று திடீர் தாக்குதல் நடத்தியது. நங்கர்ஹர் (Nangarhar) மாகாணத்தில் உள்ள, ஐ.எஸ். கோரசான் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில், காபூல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், காபூல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கொல்லபட்டான். நாங்கள் இலக்கை அழித்துள்ளோம். பொதுமக்களுக்கு எந்தவித உயிர்சேதமு இல்லை என தெரிவித்துள்ளது.










