நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து கட்சிகளும் எடுத்து வருகின்றன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு பெறலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் வரும் 28ஆம் தேதி வரை மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
மேலும், நகர மன்ற வார்டு உறுப்பினருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி விண்ணப்பங்களை பெறலாம் என குறிப்பிட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஏற்கனவே விருப்ப மனு அளித்தவர்கள் அதற்கான அசல் ரசீதை சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பெற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.







