நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு மசோதா உள்ளிட்ட 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவை தொடங்கிய உடனே நீட் வினாத்தாள் கசிவு , மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இப்படி அமளியில் ஈடுபடுவது சரியல்ல, அவையை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் எதிர்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. இதனையடுத்து மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




