கொரோனா தொற்றுக்கு காரணம் வட மாநில மாணவர்களே – மா.சுப்பிரமணியன்

வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களே கொரோனா தொற்று பரப்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை DMS வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவித்தொகை வழங்கினார்.…

வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களே கொரோனா தொற்று பரப்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை DMS வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவித்தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் கால்களை தினந்தோறும் சுத்தப்படுத்துவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தோம் என கூறினார். தமிழ்நாட்டில் 8,023 பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு 4-ம் நிலை நோயாளிகளாக தடுமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்திக்கொண்டுள்ளனர் என்றார்.

 

8,023 பேருக்கும் 2010-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.9,62,76,000-ஐ மாதந்தோறும் மக்கள் நல்வாழ்வுத்துறை செலவு செய்வதாகவும் அவர் கூறினார். இது தவிர 5,000 பேர் முதல்நிலை யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கால்களை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்இவ்வாறு தொடர்ச்சியாக கால்களை சுத்தம் செய்யும் போது வீக்கம் குறைந்து, குணமடையவும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

 

யானைக்கால் நோய் தொற்று நோய் அல்ல குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், இன்னொருவருக்கு பரவாது. யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கால்களை தொட்டு சுத்தம் செய்தால், சுத்தம் செய்பவருக்கு தொற்று ஏற்படாது. யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ச்சியாக கண்காணித்து உரிய சிகிச்சையளித்து வருகிறது.

 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இறப்பு இல்லாத நிலை தொடர்வதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வி நிறுவனங்களில் தொற்று உயர தொடங்கியதற்கு காரணம் இந்தியாவின் பிற மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வராமல் இருப்பதே என்றார். வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களே கொரோனா தொற்றை பரப்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குணமடைந்து வருகின்றனர். IIT – M, சத்ய சாய் உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு இல்லை என தெரிவித்த அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொற்று எண்ணிக்கை 23-ஆக இருக்கிறது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.