உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற துர்காபூஜையின் போது ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வட இந்தியாவில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நகரம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். இரவு, பகல் என முழு நேரமும் பஜனை, பூஜை என கோலகலமாக நடைபெறும்.
உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 51 பேர் காயமடைந்தனர். இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 300 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு சென்று தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வந்து தீவிபத்து நடைபெற்ற இடம் மற்றும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியருடன் பிற மூத்த அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்த 33 பேர் அருகிலுள்ள வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், காயமடைந்த 9 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







